திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். பேராசிரியர் பணி முதல் திமுக பொதுச்செயலாளர் பணி வரை, அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்…
1922ம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் கல்யாணசுந்தரனார், சுவர்ணம்பாள் தம்பதியருக்கு பிறந்தார் அன்பழகன். அவரது இயற்பெயர் ராமையா.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பி.ஏ.ஹானர்ஸ் பட்டம் பெற்ற அவர், 1944 முதல் 1957ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
1962ஆம் ஆண்டில் சட்டப்பேரவை மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அன்பழகன், 1967ம் ஆண்டு முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராக பணியாற்றினார்.
1971ஆம் ஆண்டில் முதன்முதலாக தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1977ஆம் ஆண்டில் தி.மு.க.வின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், காலமாகும் வரை அந்தப் பதவியிலேயே தொடர்ந்தார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பனரான அன்பழகன், ஆதரவாளர்களால் ‘இனமான பேராசிரியர்’ என்று அழைக்கப்பட்டார்.
அழகுராணி, தமிழ்க்கடல், நீங்களும் பேச்சாளராகலாம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை க. அன்பழகன் எழுதியுள்ளார்.
உடல்நலக் குறைவால் கடந்த 24-ந்தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் க.அன்பழகன் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மார்ச் 7ம் தேதி அதிகாலை காலமானார்.
Discussion about this post