காவிரி உள்பட 13 நதிகள் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகா, கோவா – கர்நாடகா, டெல்லி – ஹரியானா உள்பட பல்வேறு மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இவை தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண திட்டமிட்டுள்ள மத்திய அரசு, புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
தற்போதுள்ள நதிநீர் வாரியச் சட்டத்திற்கு போதிய அதிகாரம் இல்லாததால், அதனை மாற்றும் வகையில் இந்த புதிய சட்டம் குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.
புதிய சட்டத்தின்படி நதிநீர் பிரச்சனை உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். காவிரி, கங்கை, சிந்து, கோதாவரி, மகாநதி உள்ளிட்ட நதிகள் பாயும் பகுதிகளில் டெல்டா வளர்ச்சிக் குழுக்கள் அமைக்கப்படும்.
இந்தக் குழுக்கள் பேச்சுவார்த்தை மூலம் நநிதீர் பங்கீட்டுக்கு தீர்வு காணும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.