காவிரி நீரை சேமிக்கும் வகையில், ஆற்றின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் தேவையோ அத்தனை தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பெரம்பரலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதிக்கு ஆதரவாக முசிறியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதல்வர், மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, பாஜக ஆட்சி அமைந்தவுடன் காவிரி, கோதாவரி திட்டம் நிறைவேற்றப்படுவதே முதல் லட்சியம் என்றார்.
மழை நீர் வீணாவதை தடுக்க குடிமராமத்து பணிகள் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், எத்தனை தடுப்பணைகள் தேவையோ அத்தனை தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
முசிறியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரசாரம் மேற்கொண்டிருந்த போது அந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் வந்ததால், தனது பேச்சை நிறுத்திய முதலமைச்சர், உடனடியாக பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஆம்புலனஸ்க்கு வழி விடுமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு மக்கள் கைதட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மணச்சநல்லூரில் பெரம்பரலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதிக்கு ஆதரவாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயியாக ஒரு விவசாயியின் துயரம் தெரியும் என்பதால், விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி பெற அதிமுக அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். முதலமைச்சர் என்றும் பாராமல் அவதூறான கருத்துக்களை தெரிவித்தால், ஸ்டாலினுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று குறிப்பிட்டார்.
தொண்டனாக உழைத்து, தலைவராக தான் உயர்த்ததாகவும், குறுக்கு வழியில் தலைவராக வந்த ஸ்டாலினுக்கு உழைப்பின் அருமை தெரியாது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
துறையூரில் பெரம்பரலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதிக்கு ஆதரவாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடல்நலம் குறைவாக இருந்த காலத்தில் கூட ஸ்டாலினை நம்பிக் கட்சியை ஒப்படைக்க கருணாநிதி தயங்கியதாக தெரிவித்தார். இறுதிவரை செயல் தலைவராக மட்டுமே ஸ்டாலினை வைத்தருந்ததாகவும், கருணாநிதி மறைவுக்கு பிறகே குறுக்கு வழியில் திமுக தலைவராக ஸ்டாலின் வந்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.