பாதுகாப்புத்துறையில் இந்தியா – அமெரிக்கா இடையே 3 பில்லியன் டாலர் மதிப்பில் நாளை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொடேரா கிரிக்கெட் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் எனும் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட இவ்விழாவில் டிரம்புக்கு நமஸ்தே என கூறி பிரதமர் மோடி தமது உரையை தொடங்கினார்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு வரலாற்று சிறப்புமிக்கது என்றும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு டிரம்பை வரவேற்பதாகவும் கூறினார். ஆண்டு தோறும் இந்தியா – அமெரிக்கா இடையேயான நல்லுறவு மேம்படுகிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், நமஸ்தே என கூறி உரையை தொடங்கினார். இந்திய மக்களின் நெருங்கிய நண்பனாக அமெரிக்கா இருக்கும் என்றும், இதுபோன்ற ஒரு பிரமாண்ட வரவேற்பை தாம் பார்த்ததில்லை என்றும் கூறினார். இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டாக உள்ளது என பாராட்டிய டிரம்ப், தீவிரவாத ஒழிப்பை இருநாடுகளும் முன்னெடுக்கும் என்றார். 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளதாக குறிப்பிட்ட டிரம்ப், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது எனவும் கூறினார். இந்தியாவுக்கு வந்ததை பெருமையாக கருதுவதாகவும், ஒளிமயமான எதிர்காலத்துக்கு மக்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். வீரத்துறவி விவேகானந்தர், கிரிக்கெட் வீரர்கள் டெண்டுல்கர், கோலி ஆகியோரையும் டிரம்ப் புகழ்ந்து பேசினார்.
பின்னர் டிரம்பின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா அமெரிக்கா இடையே புதிய அத்தியாயம் பிறந்துள்ளது என்றும், 130 கோடி இந்தியர்களும் புதிய இந்தியாவை கட்டமைத்து வருவதாகவும் கூறினார். இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த புதிய சட்டங்களை உருவாக்கியுள்ளதாக கூறிய அவர், டிரம்பின் வருகை புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார். தொழில்துறையில் உச்சத்தை எட்ட இருநாடுகளும் பங்கு வகிக்கும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Discussion about this post