தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில், ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படும் என தெரிவித்துவிட்டு, மருந்துகள் வழங்கப்படாததால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கடந்த 2 வாரங்களாக ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்படுகிறது.
ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குவிந்து, இரவு பகலாக மக்கள் காத்திருந்தனர்.
இதையடுத்து, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்பட்ட ஒரே நாளில் நிறுத்தப்பட்டது.
முன்னறிவிப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவால், அதிகாலை முதலே மருந்து வாங்குவதற்காக காத்திருந்த பலர் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கிய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் திடீரென விடுமுறை என தெரிவித்து நோட்டீஸ் ஒட்டியது.
மருந்து கிடைக்கும் என மணிக்கணக்கில் காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், அதிகாலையில் இருந்தே ரெம்டெசிவிர் மருந்து வாங்க மக்கள் காத்திருந்தனர்.
ஆனால், டோக்கனை மட்டும் வழங்கிவிட்டு, மருந்து பின்னர் வழங்கப்படும் என அறிவித்ததால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தங்கு தடையின்றி அனைத்து நாட்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, மக்களின் கோரிக்கை…
Discussion about this post