சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பதிலுரை அளித்த திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தங்களது பதிலுரையை எதிர்க்கட்சியினர் கேட்பதில்லை என்று குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜனநாயக முறைப்படி சட்டமன்றம் நடைபெற்றால் இருப்போம் என்றும், தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வெளிநடப்புதான் செய்வோம் என்று விளக்கம் அளித்தார். மேலும் எதிர்க்கட்சியை அவதூறாக பேசுவது தவறு என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் உங்கள் பதிலுரையை கேட்க தயார் என்றும் எங்கள் கோரிக்கையை நீங்கள் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நாங்கள் கேட்கும் கேள்வி என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் பேசுவதை ஒளிபரப்புவதை போல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதையும் நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி கொறடா வேலுமணி, எதிர்க்கட்சித்தலைவர் பேசுவதையாவது நேரலையாக ஒளிபரப்பலாம் என்றும் இன்றைக்கு அதற்கான முடிவு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பலமுறை கூட்டத்தை புறக்கணித்திருக்கிறீர்கள் என்று விமர்சித்த எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சித்தலைவர் பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.