ஆசியாவிலேயே மிகபெரிய நவீன கால்நடை பூங்கா சேலத்தில் அமைக்கப்படும்

சேலம் மாவட்டம் தலைவாசலில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை பூங்கா 396 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கர் பரப்பளவில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்றார். கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ளவும், வெளிநாட்டு மாணவர்கள், ஆராய்ச்சி மேற்கொள்ளவும், பயன்படும் என்று பெருமையுடன் தெரிவித்தார்.

மூன்று பிரிவுகளாக கால்நடை பூங்கா அமைய உள்ளது. முதல் பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட நவீன கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள் மற்றும் நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்பட உள்ளன.

இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்த வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது.

மூன்றாவது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version