சென்னையில் தி கேராள ஸ்டோரி படம் ஒளிபரப்பப்படும் திரையங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் கேரள பெண்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டு தீவிரவாத அமைப்புகளில் சேர்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் விமர்சனத்திற்குள்ளாகி உள்ள நிலையில் மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்திருப்பதாகவும் மத உணர்வை இழிபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட தி கேரள ஸ்டோரி என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இதனை தடை செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியாக உள்ள நிலையில் அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பி களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிட உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் திரையரங்களுக்கு வருவோரை சோதனை செய்த பின்பே உள்ளே அனுமதிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதட்டமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திரைப்படம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இத்திரைப்படம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.