சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலக்கல் மற்றும் பத்தினம்திட்டா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சபரிமலைக்கு செல்ல முயன்ற இளம்பெண்கள் இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கோயிலுக்கு செல்ல முயன்ற சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் உள்ளிட்டோர் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டனர். பாஜக மற்றும் பல்வேறு அமைப்பினர் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையொட்டி, நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிலக்கல் மற்றும் பத்தினம்திட்டாவில் இன்று பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post