கூடலூர் அருகே உள்ள கஞ்சிக்கொல்லி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த யானைகளை, வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அய்யங்கொல்லி மற்றும் கஞ்சிக்கொல்லி பகுதியில் கடந்த ஒரு வாரமாக, நான்கு யானைகள் பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வந்தன. இதனால் அப்பகுதிகளில் உள்ளவர்கள் அச்சத்துடனேயே வெளியில் சென்று வந்தனர்.
இந்நிலையில் வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் கோபமடைந்த யானைகள் அங்கிருந்த இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தின. பின்னர் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.