சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் 1600 ஏக்கரில் அமையவுள்ள தெற்கு ஆசியாவிலேயே மிக பிரமாண்டமான கால்நடை பூங்காவுக்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும் என கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இங்கு அமையவுள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி, விலங்கின மற்றும் கால்நடை ஆராய்ச்சி நிலையம், தொழிற் கூடங்கள் ஆகியவற்றை உயர் தரத்தில் அமைக்க தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
கால்நடைப் பண்ணைப் பிரிவு, கால்நடை உற்பத்திப் பொருள்கள் பதப்படுத்துதல் பிரிவு, மீன்வளப் பிரிவு, விரிவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு வளாகம், தொழில் உருவாக்கப் பிரிவு என 5 பிரிவுகளாக இந்த கால்நடை பூங்கா அமைய உள்ளது.
மேலும் இங்கு அமையவுள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி, 2020 ஆண்டு முதல் செயல்பட துவங்க உள்ளது.கால்நடைத்துறையின் பட்ட மேற்படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ளும் வகையில் பயிற்சி கூடங்கள், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை இடம்பெற உள்ளது.
இந்த ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நாடை பூங்காவிற்கு முதற்கட்டமாக ரூ.396 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மருத்துவ கல்லூரி அமைக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த கால்நடை பூங்காவிற்கான ஆரம்ப கட்ட பணிகள் ரூ.50 கோடி செலவில் நடைப்பெற்றுவருகிறது.
இந்த மருத்துவக்கல்லூரியில் தமிழகத்தை சேர்ந்த 100 மாணவர்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் படிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.அதோடு 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க உள்ளது. மேலும் இந்த கால்நடை பூங்காவை 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கவுள்ளார்.
Discussion about this post