பேரறிஞர் அண்ணாவை பிரமிக்க செய்த தலைவன்; சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்

பேரறிஞர் அண்ணாவை பிரமிக்க செய்த தலைவன்; பாவேந்தர் மனதை வென்றெடுத்த புதல்வன் ; தோழர் என்ற சொல்லின் தோற்றுவாய்; தொழிற்சங்க கட்டமைப்பின் அச்சாணி; தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், சிங்கார வேலரை நினைவு கூறும் சிறப்பு செய்தி தொகுப்பு இது.

இந்தியாவில் இன்று கொண்டாடப்படும் மே தினம், ஆசியாவிலேயே முதல் முதலாக கொண்டாடப்பட்ட இடம் சென்னை திருவல்லிக்கேணி தான். கொண்டாடியவர் சிந்தனை சிற்பி சிங்கார வேலர். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் வாடிய மக்களை கண்ட போதெல்லாம் வாடிய நாத்திக வள்ளலார் அவர். மார்க்சியத்தை பாடமாக கற்காமல் தனது தேடல் வழியாகவே உணர்ந்த உன்னத சுயம்பு. தாஷ்கண்டில் இந்திய கம்யூனிட் கட்சி 1920 ம் ஆண்டு தொடங்கப்படுவதற்கு முன்பாகவே தொடங்கி விட்டன இவரின் கம்யூனிச வகுப்புகள்.

காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் சிங்கார வேலர் கம்யூனிஸ்ட்டாகவே இருந்தார். அந்த வேட்கை திரு.வி.காவால் தொடங்கப்பட்ட தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். ஊதிய உயர்வு போராட்டங்களை மட்டுமே நடத்தி வந்த அன்றைய தொழிற்சங்கத்தை வேறொரு அறிவு தளத்திற்கு நகர்த்தினார். முதலாளித்துவம், மூலதனம் குறித்து விளக்கி தொழிலாளர்களின் அறிவை விரிவாக்கினார் தோழர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்து தனது வழக்கறிஞர் பதவியை துறந்து, ’இனி எப்போதும் வழக்கறிஞர் தொழிலுக்கு செல்ல மாட்டேன். மக்களுக்காக பாடுபடுவதே என் பணி’ என சபதமேற்றார். அதன் படி இந்திய மக்களின் முழுமையான சுதந்திரத்திற்கு காங்கிரஸ் வழி மட்டும் போதாது என கூறி 1923 ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி அன்று இந்துஸ்தான் லேபர் கிஸான் என்ற கட்சியை தொடங்கி மே தினத்தையும் கொண்டாடினார். இந்தியாவில் கொண்டாடப்பட்ட முதல் மே தினம் அதுதான்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 1925 ல் முதல் மாநாடு கான்பூரில் நடைபெற்றது. அதற்கு தலைமை தாங்கியவர் சிங்கார வேலர்தான். 1928 ல் நடத்திய போராட்டம் ஒன்றுக்காக 2 ஆண்டு சிறை சென்று திரும்பிய அவர் பக்கவாத நோயில் வீழ்ந்து படுத்த படுக்கையானார். பின் பெரியாரின் வேண்டுகோளை ஏற்று மார்க்ஸிய தத்துவங்களை குடி அரசு இதழில் மொழி பெயர்த்தார்.

தமிழ் மட்டுமல்லாது, இந்தி உருது, பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி ஆகிய மொழிகளும் சிங்கார வேலருக்கு அத்துபடியாக இருந்தன. கம்யூனிசத்தை வெறும் தத்துவமாக படித்து அதனை நடைமுறை படுத்தாமல், இந்த மண்ணுக்கு ஏற்ற வகையில் அதை மாற்றி மக்களிடம் கொண்டு சேர்த்தது சிங்கார வேலரின் சீரிய பணிகளில் ஒன்று.

வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் நேரத்தில் ஒரு புரட்சி புலியை மக்கள் மறந்தனர் என சிங்கார வேலரை சுட்டி வேதனையுற்றார் பேரறிஞர் அண்ணா. ஆம்… வரலாற்றில் வஞ்சர்கள் மறக்கடிக்க படலாம். புரட்சி புலிகள் மறக்கடிக்க படலாமா….?

யாவர்க்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்

Exit mobile version