ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட உள்ள புதிய சட்டமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை, நிறைவேற்றுவதற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 2 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. விமான நிலையத்தில் திரண்ட ஜனநாயக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஹாங்காங் அரசிற்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஹாங்காங் அரசின் தலைமை அதிகாரி கேரி லாம் பதவி விலக வேண்டும், ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக காவல் துறையினர் மீது விசாரணை நடத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் நடத்தி வருவதாக தெரிவித்தனர்.