கடலூரில் இன்று முதல் மீன்பிடிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி

கடலூர் அருகே இருதரப்பு மீனவர்களிடையே எழுந்த மோதலில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, இன்று முதல் மீன்பிடிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

தமிழக அரசு மூலம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 29ஆம் தேதி கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் பகுதியில் மீனவர்கள் இருதரப்பாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். இதில், 4 படகுகள் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தை அடுத்து மீன்பிடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து, மீனவர்கள் யாரும் 2வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்தநிலையில், சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன் தலைமையில் இருதரப்பு மீனவர்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 32க்கும் மேற்பட்ட மீனவ கிராம பிரதிநிதிகள் பங்கேற்று, இனி அசம்பாவிதங்கள் நடைபெறாது என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் இன்று முதல் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க செல்லலாம் என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version