எல்லை மீறும் திமுகவினரின் அராஜகத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவாக சென்னை கந்தன்சாவடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், சிலை கடத்தலை தடுக்க எம்.ஜி.ஆர் காலத்திலேயே தனிப்பிரிவு தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார். இதுபற்றி அறியாமல் ஸ்டாலின் பேசி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கொல்லைப்புறமாக தலைவர் பதவிக்கு வந்த ஸ்டாலினுக்கு அடிதட்டு மக்களின் நலன் தெரியாது என்றார். அடிமட்ட நிர்வாகியாக இருந்ததால், அடித்தட்டு மக்களின் பிரச்சனை தனக்கு தெரியும் என்று முதல்வர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது எல்லை மீறும் திமுகவினரின் அராஜகத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
கந்தன்சாவடியைத் தொடர்ந்து திருப்போரூரில் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆறுமுகத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஏழைத் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நிதியை ஸ்டாலின் தடுப்பதாக குற்றம்சாட்டினார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேல் மற்றும் மாமல்லபுரத்தில் திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆறுமுகத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் வாக்குசேகரித்தார். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, காவிரி, கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
திருக்கழுக்குன்றத்தில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை கண்டு அண்டை நாடுகள் அஞ்சுவதாக குறிப்பிட்டார். கல்வித் துறையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தொலைநோக்கு நடவடிக்கையால் தமிழகத்தில் உயர் கல்வி படித்தவர்களின் விழுக்காடு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
செங்கல்பட்டில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரிவித்து பிரசாரம் செய்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரசை எதிர்த்துவிட்டு, தற்போது மீண்டும் கூட்டணி வைத்துள்ள திமுகதான் சந்தர்ப்பவாதத்துடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி உள்ளார். எதை எதிர்க்க வேண்டுமோ அதை எதிர்த்து அதிமுக போராடும் என்றார். சூழலுக்கு ஏற்றவாறு மாறும் கட்சி திமுக என்று முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
சிங்கம்பெருமாள்கோயிலில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரிவித்து பிரசாரம் செய்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இதன்மூலம் மழை காலங்களில் நீர் சேமிக்கப்பட்டு, வறட்சி காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை தடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
பின்னர், தாம்பரத்தில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மழை, புயல் காலங்களில் மின்தடை மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழும் பிரச்சனையை தவிர்க்க, பூமிக்கடியில் மின்கம்பிகள் பதிக்கும் நடவடிக்கைளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Discussion about this post