புதுவையில், காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்கில், ஆறு காவலர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி அடுத்த கண் டாக்டர் தோப்பு எனும் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக, கடந்த 1993-ம் ஆண்டு ஒடியன்சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை காவலர்கள் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. ஆனால், சந்திரசேகர் ,குடிபோதையில் விழுந்து இறந்து விட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், காவலர், ரவிச்சந்திரன் உள்பட ஆறு பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து கடந்த 2002-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளீதரன், கீழ் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.மேலும், காவல் துறையினர் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டால் அது சட்டத்தின் ஆட்சியை உடைத்து விடும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.