குழப்பத்தில் தி.மு.க: உடையும் கூட்டணி?!

2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெற்ற தி.மு.க, கூட்டணி கட்சிகளின் தயவோடு ‘மைனாரிட்டி’ ஆட்சி அமைத்தது. உலக வரலாற்றில் மோசமாகப் பதிவான உகாண்டாவின் இடிஅமீன் ஆட்சியைப் போல், தமிழகத்தில் கருணாநிதியின் அந்த மைனாரிட்டி ஆட்சி நடைபெற்றது. தி.மு.க-வினரால், பொதுமக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன; அமைதிப் பூங்காவான தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டது; தொடர் மின்வெட்டால் சிறு-குறு தொழில்கள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன; குறுநில மன்னர்களைப் போல் வலம் வந்த தி.மு.க அமைச்சர்கள் கோடிக்கணக்கில் ஊழல் செய்தனர்; கருணாநிதி முதல் தி.மு.க-வின் கடைக்கோடித் தொண்டன் வரை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தனர்; கருணாநிதியின் வாரிசுகள் தமிழகத்தைக் கூறுபோட்டு ஆதிக்கம் செலுத்தின; நரகத்தில் வாழ்வதைப்போல் ஒவ்வொரு நாளையும் கழித்தனர் தமிழக மக்கள்.

கருணாநிதி குடும்பத்தையும், தி.மு.க-வையும் அறவே வெறுத்த தமிழக மக்கள், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க-விற்கு கடைசி ஆணியை அடித்தனர். அந்தத் தேர்தலில் தி.மு.க தடம் தெரியாமல் துடைத்தெரியப்பட்டது. அன்று இழந்த ஆட்சியை இன்றுவரை தி.மு.கவினால் மீட்க முடியவில்லை. அப்போது தி.மு.க மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு இன்றும் நீங்கவில்லை. மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு இப்போதுவரை தி.மு.க-வும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மாறாக, மக்களை ஏமாற்றும் போலி வாக்குறுதிகள்… நமக்கு நாமே என்று சொல்லி பொய் நாடகம்… என குறுக்குவழிகளை நாடிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், 2016-ல் ஆட்சியைப் பிடித்துவிடலாம் எனக் கனவு கண்டார். மு.க.ஸ்டாலினின் நாடகங்களை நம்பாத தமிழக மக்கள், அந்தத் தேர்தலிலும் தி.மு.க-வுக்கு தோல்வியையே பரிசாகக் கொடுத்தனர். மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு, கனவாகவே கலைந்தது.

32 ஆண்டுகளுக்கு பிறகு, ஆட்சியில் இருந்த கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தி புதிய சாதனையைப் படைத்தனர் தமிழக மக்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவரது அமைச்சர்களும் நடத்திய நல்லாட்சிக்குப் பரிசாக தமிழக மக்கள் கொடுத்த மகத்தான வெற்றி அது.

அதைப்புரிந்து கொள்ளாத மு.க.ஸ்டாலின்… 2021 தேர்தலை சந்திக்கவும் குறுக்கு வழிகளையே நாடி உள்ளார். 2 சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சிகள், மக்கள் செல்வாக்கு இல்லாத தலைவர்கள், பிரசாந்த் கிஷோர் நடத்தும் தனியார் நிறுவனம் போன்றவற்றுடன் கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்திக்கும் திட்டத்தில் இருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனால், தற்போது அந்தக் கூட்டணிக்கும் குந்தகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரசாந்த் கிஷோர் உள்ளே வருவதற்கு முன்பே, தமிழக காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க-வுக்கும் இடையில் பனிப்போர் உருவாகிவிட்டது. தங்கள் வாக்கு வங்கிக்கு ஏற்ப உள்ளாட்சித் தேர்தலில் இடங்களை ஒதுக்கவேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. அதைக் கண்டுகொள்ளாத மு.க.ஸ்டாலின் தன்னிச்சையாக தி.மு.க போட்டியிடும் இடங்களை அறிவித்தார். காங்கிரஸ் கட்சி அதைச் சுட்டிக்காட்டியபோது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கி எங்கே இருக்கிறது என்று கேட்டார் தி.மு.க பொருளாளர் துரைமுருகன். அது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போலானது. அதையடுத்து, நாடாளுமன்ற மாநிலங்களவைக்கும் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தார்
மு.க.ஸ்டாலின். அது காங்கிரஸ் கட்சியை இன்னம் கடுப்பாக்கிய நிலையில், காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி முறிந்த நிலையில்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில், இடதுசாரிகளையும், விடுதலைச் சிறுத்தைகளையும் வெளியேற்றச் சொல்லி ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். விடுதலைச் சிறுத்தைகளை வெளியேற்ற வேண்டும் என்ற குரல் தி.மு.க-வில் ஏற்கெனவே ஒலித்துக் கொண்டிருப்பதுதான். பிரசாந்த் கிஷோர் இன்னும் அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுத்துள்ளார். அதனால், விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க-வைவிட்டு எந்தநேரத்திலும் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.


மதிமுக-வைப் பொறுத்தவரை வைகோ-வை மாநிலங்களவை எம்.பி-யாக்கியதோடு தமது கடன் தீர்ந்துவிட்டதாகத் கருதுகிறது திமுக. ம.தி.மு.க-வை ஒரு கட்சியாகக் கூட மதிப்பதில்லை திமுக., கூட்டணி கட்சி என ஒட்டிக் கொண்டிருப்பவர்களை வெளியேற்றுங்கள்… தி.மு.க-வை தனியாக ஜெயிக்க வைக்கிறேன் என பிரசாந்த் கிஷோர் சொல்லிக் கொண்டிருப்பதாகவும், மு.க.ஸ்டாலின் அதை நம்பிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டிருக்கிறது தி.மு.க கூட்டணி என்பதே தற்போதைய நிலவரம்!

Exit mobile version