மீ டூ புகார் குறித்து விசாரணை நடத்த தனிக்குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த குற்றங்கள் அண்மைக் காலமாக மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. 2005 -ம் ஆண்டு நடைபெற்ற படப்பிடிப்பின் போது நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் அவருக்கு நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். சட்ட ரீதியாக நானா படேகருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இதனையடுத்து, நானா படேகர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் சத்தியாமேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், கவிஞர் வைரமுத்துவால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பதிவிட்டிருந்தார். பாடகி சின்மையும் வைரமுத்துவால் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றம்சாட்டி உள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.பாலிவுட் நடிகர் அக்ஷ்ய குமார் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு நாள் படப்பிடிப்பை நிறுத்தி உள்ளார்.
இந்நிலையில் மீ டூ குறித்து விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதற்காக குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், இந்தக் குழுவில் மூத்த நீதித்துறை அதிகாரிகள், சட்டத்துறை நிபுணர்கள் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.