"ஹைட்ரோ கார்பன் திட்டம்" – மவுனம் காக்கும் திமுக அரசு

தமிழ்நாடு அரசிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டாவை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்மூலம் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, பிரித்தெடுத்தல் ஆகிய பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையால் டெல்டா மாவட்ட விவசாயிகள் நிம்மதியடைந்தனர். இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக 10 புதிய கிணறுகள் தோண்டப்படுகின்றன.

அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இந்த பகுதிகளை சேர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதனிடையே, தமிழ்நாடு அரசிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே அரியலூரில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசிடம் இருந்து இதுவரை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் வரவில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் விளக்கத்தால் அரியலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தமிழ்நாடு அரசு மவுனமாக இருந்து மறைமுகமாக ஆதரவு அளிக்கிறதா..? என்ற சந்தேகமும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Exit mobile version