1912-ம் ஆண்டு, பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய ஆர்.எம்.எஸ். டைட்டானிக் சொகுசுக் கப்பல், கடலில் உள்ள உப்பு மற்றும் உலோகங்களை உண்ணும் பாக்டீரியாக்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
டைட்டானிக் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது ஜாக் மற்றும் ரோஸ்-ன் காதல் கதை தான். அந்த திரைப்படத்தில் வருவது போலவே, சவுதாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க்கிற்கு ஏப்ரல் 10, 1912-ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. இந்தப் பயணத்தின்போது, எதிர்பாராதவிதமாக டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி அட்லாண்டிக் கடலில் சுமார் 2,224 பயணிகளுடன் மூழ்கியது. இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தக் கோரச் சம்பவம் உலக வரலாற்றில் நீங்கா துயரத்தை ஏற்படுத்தியது.
ஆழ்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் இருக்கும் இடத்தை, கடல் ஆய்வாளரான ராபர்ட் பல்லார்ட் மற்றும் அவரது குழுவினர் 1985-ல் கண்டுபிடித்தனர். பின்னர் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த “ட்ரைடன் SubMarines Of செபாஸ்டியன்” என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் குழு, 2004-ல் டைட்டானிக் இருக்கும் இடத்தில் சில ஆய்வுகளை மேற்கொண்டு, பல்வேறு படங்களையும் வெளியிட்டது.
இந்த நிலையில், அதே நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர், மீண்டும் கடந்த மாதம் டைட்டானிக் கப்பலைச் சோதிக்கச் சென்றனர். அட்லாண்டிக் கடலில் 12 ஆயிரத்து 500 அடி ஆழத்தில் இருக்கும் இந்த டைட்டானிக் கப்பலை, இந்தக் குழு ஆகஸ்ட் மாதம் மட்டும் ஐந்து முறை சோதனை செய்துள்ளது. அதில், உடைந்த கப்பலில் வாழும் உயிரினங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
உறைய வைக்கும் சூழ்நிலைகளில், கும்மிருட்டான நீரில், அதி திவீரமான அழுத்தத்திலும் அங்கே உயிரினங்கள் வாழ்கின்றன. டைட்டானிக் சிதைவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தெரிவிக்கின்றனர். டைட்டானிக் பேரழிவுக்கு சாட்சியாக இப்போது இருப்பது இந்த உடைந்த கப்பல்தான். அப்போது உயிர் தப்பிய அனைவரும் இப்போது காலமாகிவிட்டார்கள். எனவே, உடைந்த பாகங்கள் மூலம், சொல்வதற்கு ஏதோ தகவல் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம் என்கின்றனர் ஆய்வாளர்கள்..
இதன் மூலம், ஆழ்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல், இன்னும் சில வருடங்களில் இல்லாமலே போய்விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நம் நெஞ்சங்களில் டைட்டானிக் கப்பல் மற்றும் அதைச் சுற்றிய ஜாக் மற்றும் ரோஸ்-ன் கற்பனை காதல் கதையும், என்றும் மூழ்காமல் நிலைத்திருக்கும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
Discussion about this post