இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் மொயின் அலி 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாகக் கூறி தன்னுடைய ஓய்வினை அறிவித்திருந்தார். ஆனால் பயிற்சியாளர் மெக்கல்லமும், கேப்டன் பென் ஸ்டோக்சும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த அறிவிப்பை திரும்பப் பெற்று, ஆஷஸ் வரை ஆடுவேன் என்று சொல்லியிருந்தார். தற்போது ஆஷஸ் தொடர் நிறைவு பெற்றதை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகினார். முக்கியமாக இந்த ஆஷஸ் தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வெல்வதற்கு முக்கியத் தூணாக மொயின் அலி இருந்துள்ளார். அப்போட்டியில் முக்கியமாக மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட்கள் விளையாட இருக்கிறது. எனவே தொடர்ந்து டெஸ்டில் விளையாடும் படியும் முடிவை மேற்கொண்டு பரிசீலிக்கும்படியும் மொயின் அலியிடம் பயிற்சியாளர் மெக்கல்லமும், கேப்டன் பென் ஸ்டோக்ஸும் கூறியுள்ளனர். அதற்கு மொயின் அலி. இந்திய சென்று டெஸ்ட் விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது பின்வருமாறு உள்ளது.
எனது முடிவு ஸ்டோக்ஸுக்கும் மெக்கலமிற்கும் நன்றாக தெரியும். அற்புதமான இந்த ஆஷஸ் தொடரில் வெற்றியுடன் எனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்துவிட்டேன். எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் ஏற்றம், இறக்கங்கள் நிறைந்தது. நான் அதை மாற்ற முடியாது. ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன். இனி வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்த உள்ளேன். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.