ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ராணுவ மேஜர் உள்பட ராணுவத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.
புல்வாமா மாவட்டத்தின் பிங்லான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், துப்பாக்கிச்சூட்டில் ராணுவ மேஜர் உள்பட ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்தப்பகுதியில் 2 அல்லது 3 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், மீண்டும் அப்பகுதியில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் 4 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post