சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கடந்த 2014ம் ஆண்டு ரயிலில் குண்டுவெடித்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சுராஜ் என்ற நகை வியாபாரியிடம், 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 282 கிராம் தங்க நகையை, இரண்டு மர்ம நபர்கள் வழிப்பறி செய்தனர். அந்த வழக்கில் தொடர்புடைய யாசின் என்பவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நபரான ரபிக் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவரை பெரியமேடு காவல்துறையினர் பிடித்தனர். விசாரணையில், அவர் அல் உம்மா அமைப்புடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கடந்த 2014ம் ஆண்டு, ரயிலில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் தொடர்புடையவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரபிக்கை, கடந்த 4 ஆண்டுகளாக என்.ஐ.ஏ. அமைப்பு தேடி வந்த நிலையில், காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.