இந்தியாவில் இந்த நூற்றாண்டின் இறுதியில் சராசரி வெப்பநிலை 4.4டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும் என மத்திய புவி அறிவியல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய புவி அறிவியல் துறை இந்தியாவின் காலநிலை மாற்றம் குறித்த மதிப்பீடு என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் சராசரி வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்து இருப்பதாகவும் இந்தியாவைப் பொருத்தவரை இயல்பான வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து இந்த நூற்றாண்டின் இறுதியில் 4.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக உயர்வதன் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் வெப்ப அலை தீவிரம் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டின் மத்தியில் பருவமழையின் தீவிரம் குறையும் என்றும் அதிகபடியான தீவிர புயல்களின் தாக்கம் இந்தியாவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இயற்கை சூழலை மனிதர்கள் கடுமையாக குலைப்பதால், தட்ப வெட்ப சூழல் இயற்கையாக மாறுவதற்கு அப்பாற்பட்ட சில இடங்களில் சூழலியல் மாற்றங்கள் நிகழ்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.
Discussion about this post