மழையால் முதல்நாள் ஆட்டம் பாதிப்பு: இந்தியா 5 விக். இழப்புக்கு 122 ரன்கள் குவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.

வெலிங்டனில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் களம் இறங்கினர். நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சால் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா 16 ரன்களிலும், மயங்க் அகர்வால் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புஜாரா 11 ரன்களிலும், கேப்டன் கோலி 2 ரன்களிலும், விஹாரி 7 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

55 ஓவர்கள் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், முதல் நாள் ஆட்டம் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 55 ஓவர்கள் முடிவில் 122 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 38 ரன்களிலும், ரிஷப் பண்ட் 10 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

Exit mobile version