தஞ்சாவூர் அருகே பேருந்து நிறுத்தத்துக்கு சென்ற பயணியிடம் இருசக்கரவாகனத்தில் வந்து நகை பறித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தங்கச் சங்கிலி என்று நினைத்து வெள்ளிச் சங்கிலியை வழிப்பறி செய்தவர்கள் சிக்கியது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
இருசக்கரவாகனத்தில் வந்து பேருந்து பயணியிடம் வழிப்பறியில் ஈடுபட்டு போலீசில் சிக்கி இருக்கிறார்கள் இந்த செயின் கொள்ளையர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் செங்கிப்பட்டி சாலையில் உள்ள தட்டான் குளம் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த நபர் அணிந்திருந்த தங்கச் செயினை, அவ்வழியாக இருசக்கரவாகனத்தில் வந்த மூவர் அடங்கிய கும்பல் அறுத்துச் சென்றுள்ளனர். உடனடியாக அந்த நபர் கூச்சலிட அக்கம்பக்கத்தினர் சுற்றி வளைத்ததில் இருசக்கரவாகனத்தில் வந்த இருவர் மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்களைப் பிடித்து தர்ம அடி கொடுத்த அங்கிருந்தவர்கள், பூதலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
டவுண்ஷிப் பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான முருகேசன், ராமலிங்கம் ஆகியோர், பூதலூர் அருகில் உள்ள முனியாண்டவர் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு சொந்த ஊருக்குச் சொல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்தபோதுதான், முருகேசன் அணிந்திருந்த செயினை வழிப்பறி செய்துள்ளனர். இந்த செயின் தங்கம் அல்ல என்றும், தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிச் செயின் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், செயின் பறிப்பில் ஈடுபட்டு பொதுமக்களிடம் சிக்கியவர்கள், திருவையாறு அடுத்த அம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்த வீரமணி மற்றும் சாமிநாதன் என்பதையும் விசாரணையில் கண்டறிந்தனர். தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செயின் பறிப்பில் ஈடுபட்டு இருசக்கரவாகனத்துடன் தப்பி ஓடிய சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விடியா ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பட்டப்பகலில் இருசக்கரவாகனத்தில் வந்து செயின்பறிப்பில் ஈடுபட்ட சம்பவமும் ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்தி உள்ளது.