தமிழ்நாட்டின் கடைகோடி மக்கள் வரை உச்சரித்த மூன்று எழுத்து புரட்சித் தலைவர் “எம்.ஜி.ஆர்” என்கிற மூன்றெழுத்து. தன் நடிப்பினாலும், கள செயல்பாட்டினாலும் மக்கள் மனதைக் கவர்ந்தவர் புரட்சித் தலைவர்.
”அச்சம் என்பது மடமையடா”… அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு… தாயகம் காப்பதே கடமையடா”
என்று உணர்வெழுச்சிப் பொங்க திராவிட சித்தாந்தங்களை தன் சினிமாப் பாடல்கள் மற்றும் வசனங்கள் மூலமாக மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதனாலேயே “அண்ணா”வின் மனம் கவர்ந்த இதயக்கனி என்று ஆனார்.
”மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா!”
என்ற பாடலுக்கு இணங்க தலைவராக மாறினார் புரட்சித் தலைவர். ஆம் மக்கள் தன் அதிகாரத்தின் பிடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தக் கூட்டத்திற்கு சாட்டையடி கொடுத்து அன்பும் அறமும் தான் மக்களை வழிநடத்தும் என்பதை முதல்வராக வென்று அவர்களுக்கு நல்லாட்சி வழங்கியதன் மூலம் எம்.ஜி.ஆர் அவர்கள் செய்தார்.
அண்ணாவின் முதன்மைத் தம்பிகளில் ஒருவரான எம்.ஜி.ஆர் அவர்கள், அண்ணாவின் மறைவிற்கு பிறகு சில சூத்திரதாரிகளால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆம், நேர்மையின் இலக்கணமாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி கேள்வியெழுப்பியதால் நயவஞ்சகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எதற்கு சளைத்தவர் அல்ல புரட்சித் தலைவர். அவர் மக்கள் மீது நம்பிக்கை வைத்தார். மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தனர்.
1972 ஆம் ஆண்டு வாக்கில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினைத் துவங்குகிறார். மக்கள் அவர் பக்கம் கெட்டியாக நின்றனர். குள்ளநரிகள் வலைவிரிக்கவும் ஆயத்தமாகினார்கள். ஆனால் அனைத்தையும் கலைந்து, 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறினார் புரட்சித் தலைவர். அதுவும் இதே ஜூன் 30-ஆம் நாளில்தான் அந்த வரலாற்று அரசியல் திருப்பம் நடந்தேறியது.
”வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்”
இன்றும் மக்களின் மனதில் நிற்பவர் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டுமே!
Discussion about this post