தமிழ்நாடு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் அறிவியல் துறை
படிப்பில் 20 சதவீதம் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகவும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என கால்நடை மருத்துவக் கல்லூரி துணைவேந்தர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வகுமார் வேப்பேரி பல்கலைக்கழக வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 7 கால்நடை கல்லூரிகள் உள்ளன. இதில் 4 இளநிலை பட்டப்படிப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு 16,687 மாணவர்கள் சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது வரை 19,044 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு அதாவது 2023-24 ம் கல்வியாண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜூலை 3 வது வாரம் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும், கலந்தாய்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்படும் அக்டோபர் மாதம் இளநிலை படிப்புக்கான கல்லூரிகள் தொடங்கும். நிகழாண்டில் புதிய பாடப்பிரிவுகளோ புதிய கல்லூரிகளோ தொடங்கும் திட்டம் இல்லை. புதிய கல்லூரிகளை தொடங்குவது அரசின் கொள்கை முடிவு.
2023-24 கல்வி ஆண்டிலும் இளநிலை படிப்புகளில் +2 மதிப்பெண் அடிப்படையிலே மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துகொள்ளப்படாது.அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் 45 மாணவர்கள் சேர உள்ளனர் என்றார்.
தொடர்ந்து பேசிய துணைவேந்தர் நாட்டு மாட்டு பால், கலப்பின மாட்டுப் பால் தொடர்பான ஆய்வுகள் இன்னும் முழுமை பெறவில்லை. ஆனால் நாட்டு மாட்டுப்பால் வகையான A1 வகை பால்களில், கலப்பின மாட்டுப்பால் வகையான A2 வகை பாலை விட அதிக நன்மைகள் உள்ளதினால் நாட்டு மாட்டு பாலை குடிப்பது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது. இதே வேளையில் கலப்பின மாட்டுப்பாலை குடிப்பது தவறும் இல்லை என்றார்.