தமிழகத்தில் விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏழை எளியோருக்கு பசியாற்ற வழங்கப்படும் ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு லாரி லாரியாக சட்டவிரோதமாக கடத்தி கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர் சில சமூக விரோதிகள்!
பெரும்பாலும் அரிசி கடத்தல் என்பது, உணவுப்பொருள் வழங்கும் கிடங்குகளில் இருந்து தான் தொடங்கப்படுவதாக கூறப்படுகிறது. மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் 20 கிலோ அரிசி மட்டும் தான் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் சார்பில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் 35 கிலோ அரிசி விடியா திமுக அரசால் முறையாக வழங்கப்படாமல் அரிசி கிடங்குகளிலிருந்து நேரடியாக ஆந்திரா மற்றும் கேரளாவிற்கு லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லாரிகளில் கடத்திவரப்படும் ரேஷன் அரிசி வேற்று மாநில எல்லைகளில் இருசக்கர வாகனங்கள் மூலம் கடத்தப்பட்டுவருகிறது. இதுகுறித்த புகார்கள் அதிகளவில் தெரிவிக்கப்பட்டாலும் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் இதுபற்றி கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு கடந்த எட்டு மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ரேஷன் அரிசி கடத்தபட்டிருக்கும் நிலையில், அரிசி கடத்தும் ஆட்களை கைது செய்ய முடியவில்லை என உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஆபாஷ்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது இந்த விடியா அரசின் திராணியற்ற தன்மையைக் காட்டுவதாக உள்ளது.
மேலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழ்நாடு உணவு வழங்கல் துறை கிடங்கில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய லாரிகள் மற்றும் டிரக்குகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இருப்பினும் அதற்கான கட்டுப்பாட்டு அறையை திறனற்ற திமுக அரசு இதுவரை திறக்காமல், அரிசி கடத்தலுக்கு ஆதரவு தெரிவித்து வருவது போல செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் கடத்தப்படும் அரிசி யார் மூலம் கடத்தப்படுகிறது, எந்தெந்த ஆலை உரிமையாளர்களுக்கு இதில் தொடர்புள்ளது என்பன பற்றி, காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தெரியும் என்றும், ஆனாலும் கட்டுப்படுத்த முடியாமல் விடியா அரசின் காவல்துறையினர் திணறி வருவதாகவும் ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.