முதியவர் மீது மிளகாய்ப்பொடி தூவி வைரமோதிரத்தை கொள்ளையடித்த கும்பல்!

மிளகாய் பொடியை தூவி, மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான வைர மோதிரம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஆசாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர், தன் தாத்தாவின் 59.6 கிராம் வைர மோதிரத்தை விற்பனை செய்ய, சென்னையைச் சேர்ந்த இடைத்தரகர்கள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி, கடந்த 13-ஆம் தேதி மாலை, திண்டிவனம் அருகிலுள்ள கூட்டேரிப்பட்டி என்ற இடத்தில், கருணாநிதியும் அவரது நண்பரும் இடைதரகர்களுக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு காரில் வந்த இடைத்தரகர்கள், மோதிரத்தை பரிசோதிக்க வேண்டும் என்று கூறி கருணாநிதியை அழைத்துச் சென்றனர். ஆனால், கருணாநிதி எதிர்பார்க்காத நேரத்தில், அவர் மீது மிளகாய் பொடியை தூவினர். எதிர்பாராத மிளகாய்ப்பொடி தாக்குதலால் நிலைகுலைந்த கருணாநிதியிடமிருந்து, மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான வைர மோதிரத்தை கொள்ளையடித்ததோடு, கருணாநிதியின் நண்பர் பிரகலாதன் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் 2 பவுன் மோதிரத்தையும் பறித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து மயிலம் காவல்நிலையத்தில் கருணாநிதி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இடைத்தரகர்களான சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த அருள்முருகன், வடபழனியை சேர்ந்த செந்தில் ஆகிய இருவரிடமும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்ததில், குற்றவாளிகள் இருக்கும் இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர்.

அதன்படி, விழுப்புரத்தை சேர்ந்த பரந்தாமன், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், மகேஷ், விஜய்சேகர் மற்றும் பிரசாந்த் ஆகிய 5 பேரையும், தனிப்படை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து மூன்று மோதிரங்களை பறிமுதல் செய்தனர். அவற்றில் ஒரு மோதிரம் மட்டுமே அசலானது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், காணாமல் போன மோதிரங்கள் குறித்தும், இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version