சுட்டெரிக்கும் கத்திரி வெயில்! அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் தொடர் வெயில்!

அக்னி நட்சத்திரம் முடிந்தபோதிலும் தொடர்ந்து கொளுத்தும் கோடை வெயிலால் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் தற்போது கோடை கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. கடந்த மே 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும், வெப்பத்தின் தாக்கம் பெருமளவில் தெரியாமலேயே இருந்தது. இதனால் மக்கள் சற்று பெருமூச்சு விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கத்தரி வெயிலின் கோரத்தாண்டவம் ஆடியது. அதுவும் கடந்த வாரம் மூன்று நாட்கள் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் சதம் அடித்தன.

வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் முதியோர், குழந்தைகள் அதிகளவில் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதுவும் குறிப்பாக பகல் 12 மணி முதல் 3 மணி வரையில் வெளியே செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

வெயிலின் தாக்கத்தை தணிக்க சாலையோர இளநீர், கம்பங்கூழ், மோர், தர்பூசணி உள்ளிட்ட கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருப்பதைக் காண முடிகிறது. வெயிலின் தாக்கம் தாங்காமல் குழந்தைகளுக்கு வேர்க்குரு, அலர்ஜி உள்ளிட்டவை ஏற்பட்டு மிகவும் சிரமப்படுவதாக குடும்பத் தலைவிகளும், ஏசி பயன்பாடு அதிகளவில் இருப்பதால் மின்கட்டணமும் மாத பட்ஜெட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக குடும்பத் தலைவர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்ற நாளில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்துள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்திருந்தாலும் பொதுமக்கள் வெளியே செல்லும் போது குடை, தொப்பி அணிந்து செல்லவும், அதிகளவில் தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து உள்ள பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version