மாணவர்களின் கல்வி எந்த நிலையிலும் தடைபட்டுவிடக் கூடாது என்பதில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் காட்டும் ஆர்வம் அளவிட முடியாதது. அதற்கு முன்மாதிரியாக ஆன்லைன் ரேடியோ மூலம், மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் கத்தாழை கிராம அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பற்றி விளக்குகிறது இந்த செய்திக் கட்டுரை
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது கத்தாழை கிராமம். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள், கொரானோ காரணமாக தங்களது வீடுகளில் இருந்தபடி கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படும் நிலை காணப்பட்டது. இதனையறிந்த அரசுப் பள்ளி ஆசிரியர் கார்த்திக்ராஜா, மற்ற ஆசிரியர்கள் துணையுடன், வலையொலி வானொலி எனப்படும் ஆன்லைன் ரேடியோவை, மாணவர்களுக்காக வடிவமைத்தார். இதன் மூலம், அனைத்துப் பாடங்களும் ஆசிரியர்கள் மூலம் ஒலிவடிவில் பதிவு செய்து, பின்னர் அது வானொலி மூலம் மாணவர்களுக்கு ஒலிபரப்படுகிறது.
பாடங்கள் மட்டுமின்றி நீதிக் கதைகள், பழமொழிகள், மனவளத்தை அதிகரிக்கும் கதைகள் என ஆசிரியர்கள் தங்களது குரலில் பதிவு செய்து அனுப்புவதாக, மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
கத்தாழை கிராமத்தின் பள்ளி மாணவர்களுக்கு என்று உருவாக்கப்பட்ட இந்த கல்வி வானொலி, இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும், மாணவர்களின் கல்வி நலனுக்காக பயன்படுத்தப்படுவது, மிகச் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை துறை ரீதியாக ஊக்கப்படுத்தினால், மேலும், பல மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த உதவும் என கூறுகிறார் ஆசிரியர் கார்த்திக்ராஜா.
அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த கல்வி வானொலி, அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதே, ஆசிரியர் உள்ளிட்ட அனைவரின் விருப்பமாக உள்ளது. இதன்மூலம், எளிய முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுவதால், மாணவர்களும் அதிக ஆர்வத்துடன் பயில முடியும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றன. திய தொழில்நுட்பங்கள் மாணவர்களின் மனநிலையை பாதிக்காமல், அவர்களை மேம்படுத்துவது வரவேற்க கூடியதே….