நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், புயலால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்பட கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசு அறிவித்த வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்திய முதலமைச்சர், புயல் பாதிப்புகள் எதிர்கொள்ளும் வகையில், அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவித்தார். இன்று தமிழகத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
புயல் தொடர்பான அனைத்து தகவல்களும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், முகாம்களில் மக்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். முழு கொள்ளளவை எட்டிய ஏரிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 519 ஆக உயர்ந்துள்ளதாக கூறிய முதலமைச்சர், மழையின் அளவை பொறுத்தே, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து பரிசீலிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.