கேரளாவில் பறவைக் காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் கண்டறியப் பட்டுள்ளதாக மத்திய அரசு, கடந்த 7ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாளிலிருந்தே, தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உத்தரவின்படி, தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் நோய் தொற்று பரவாமல் இருக்க தொடர் கண்காணிப்பும், ஆலோசனைகளும் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக – கேரள எல்லைகளில் உள்ள 26 இடங்களில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்திற்கும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த ஒரு மாத காலத்தில் கேரளாவில் இருந்து வாங்கப்பட்ட முட்டைகள், கோழிகள் மற்றும் வாத்துக் குஞ்சுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் அடங்கிய ஆயிரத்து 61 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் தொடர்பாக கோவை பன்முக மருத்துவமனையில் 24 மணிநேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறையை 0422 – 2397614 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்புக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் கண்டறியும் வகையில் ஈரோடு மற்றும் நாமக்கல்லில் பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை, சுற்றுச்சுழல் துறை, வனத்துறை உட்பட அனைத்து துறைகளும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவித்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து வரும் கோழிக் குஞ்சுகள், முட்டைகள் மற்றும் தீவனம் போன்றவைகளை பெறுவதாக இருந்ததால், அரசு அலுவலர்களிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.