தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பேசுகையில் அதிமுகவினர் எதற்காக வெளிநடப்பு செய்தார்கள் என்பதைக் கூறினார். தமிழ்நாட்டில் அராஜக ஆட்சி செய்து வரும் திமுகவினால் சட்டம் ஒழுங்கானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் பணத்தை வாரி இறைத்து பணப்பட்டுவாடாவில் இறங்கியது இந்த விடியா அரசு. ஆவின் பால் தட்டுப்பாடு, மின்சார வரி உயர்வு, முதியோர் உதவித்தொகை குறைப்பு, பொய்வழக்குத் தொடுத்தது போன்ற பல்வேறு காரணத்திற்காக வெளிநடப்பு செய்ததாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி அவர்கள், இந்த பட்ஜெட்டில் திமுக அரசு மக்களுக்கு கொடுத்தது வரி உயர்வுதான். அதுதான் அவர்கள் மக்களுக்கு கொடுத்த பரிசு என்று கூறினார். அத்தியாவசிய பொருட்களுக்கு விலை உயர்வு, ஆவின் தட்டுப்பாடு, மின்சார வரி உயர்வு போன்றவற்றைக் குறித்து பட்ஜெட்டில் எதுவும் சொல்லப்படவில்லை. மேலும் இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் தான் உள்ளதே தவிர திட்டங்களுக்கான நிதி இல்லை என்று குறிப்பிட்டார். இது ஏழை எளிய மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என்று என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்தார். அதேபோல அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்கிற வாக்குறுதி என்னவாயிற்று என்றும் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் என்றால் தகுதி வாய்ந்தவர் என்று எப்படி நிர்ணயிப்பீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகத்தில் போதைப்பொருட்கள் வரத்து அதிகரித்து வருகிறது. நிதிப்பற்றாக்குறை உள்ளது என்று கூறிகிறார்கள், வரி வருவாய் உயர்ந்துள்ளது என்றும் சொல்கிறார்கள். வரி வருவாய் உயர்ந்திருந்தால் எப்படி நிதிப்பற்றாக்குறை நிகழ்கிறது. வருவாய் உயர்ந்திருக்கிறது என்றால் நிதிப்பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்கிற அறிவிப்பை பட்ஜெட்டில் காணவில்லை. விடியா திமுக அரசின் இந்த பட்ஜெட் கானல் நீர் போன்றது. அது மக்களின் தாகம் தீர்க்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.