தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்கள் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை முதல்நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய கோயில்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சென்னை வடபழநியில் உள்ள முருகன் கோயிலில், பொதுமக்கள் தரிசனத்திற்கான பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பொது தரிசன பாதையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திரண்டு, பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக, பக்தர்களுக்கு விபூதி மட்டுமே பிரசாதமாக வழங்கப்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கிழக்கு கோபுரம் தவிர்த்து, வடக்கு, தெற்கு, மேற்கு கோபுரங்கள் மற்றும் அம்மன் சன்னதி வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்திய பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கொரோனா காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரங்கநாதருக்கு வழக்கமான அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
நெல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post