2019-ம் ஆண்டிற்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழுக்கும் தமிழியல் ஆய்வுக்கும் தொடர்ந்து தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரின் பணியை சிறப்பிக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2019-ம் ஆண்டிற்கான சித்திரைத் திங்கள் தமிழ் புத்தாண்டு விருதுகள் பெரும் 56 பேரின் பெயர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்த்தாய் விருது புவனேசுவர் தமிழ் சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் காசுமானுக்கும் உ.வே.சா விருது நடன. காசிநாதனுக்கும் வழங்கப்படுகின்றன. சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருதுகள் யூமா வாசுகி உள்ளிட்ட 10 பேர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் விருது தொகையும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், பொன்னாடையும் வழங்கப்படவுள்ளன.
மாவட்டங்களில் தமிழ்ப்பணி ஆற்றிவரும் தமிழ் செம்மல் விருது பெறுவோர் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 56 விருதுகளும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வழங்குகிறார்.