பெண்ணையாறு நதிநீர் பிரச்சனையில் சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பெண்ணையாறு பிரச்னையில் திமுக பொருளாளர் துரைமுருகனின் அறிக்கைக்குப் பதில் அளித்த அமைச்சர், பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைகள் கட்டுவதைத் தடுக்கத் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், சட்டப் போராட்டங்களையும் பட்டியலிட்டுள்ளார்.மதராஸ் – மைசூர் ஒப்பந்தத்தை மீறும் வகையில் கர்நாடக அரசு அணை கட்டத் தொடங்கியதும், அது குறித்து மத்திய அரசின் கவனத்திற்குத் தமிழக அரசு கொண்டு சென்றதைக் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசிடம் இருந்து சாதகமான பதில் வராத நிலையில், கர்நாடகத்தின் அணை கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்ததை அறிக்கையில் அமைச்சர் ஜெயக்குமார் நினைவுகூர்ந்துள்ளார்.
அனுபவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞர் மூலம் திறமையான வாதங்களைத் தமிழக அரசு எடுத்து வைத்ததாகவும், எனினும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாட்டின் இடைக்கால மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பிரச்னைக்குத் தீர்வு காண நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசை 4 வாரக் காலத்திற்குள் அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சத்தை முழுமையாகப் படிக்காமல், தமிழக அரசு தொடர்ந்த அசல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதை அரசியல் காரணங்களுக்காக மறைத்து, துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் திமுக செய்த துரோகம் உலகம் அறிந்தது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னைகளில் தமிழக அரசு உறுதியுடன் செயல்பட்டு உரிமைகளை நிலைநாட்டும் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், பெண்ணையாறு நதிநீர்ப் பிரச்னையிலும் தொடர்ந்து சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Discussion about this post