தமிழக அரசு பேருந்துகளில் இந்தி வாக்கியம் இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, பேருந்துகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் அண்மையில் புதிதாக 500 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிலையில், அரசு பேருந்துகளில் தமிழ் மொழிக்கு பதிலாக இந்தி பயன்படுத்தப்பட்டுள்ளதாக திமுகவின் கனிமொழி ட்விட்டரில் விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அரசு போக்குவரத்துத் துறை , தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் அவசரக்கால வழிகள் என்பதை அறிந்து கொள்வதற்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்படுவதோடு வழிக்காட்டி ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.அண்டை மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு விரைவுப் பேருந்தில் மட்டும், அவசரகால வழி என்பது இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்ததாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அது உடனடியாக சரி செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.