கஞ்சா போதையில் இளைஞர் அட்டகாசம் அரசு பேருந்தை இயக்க முயற்சி; பரபரப்பு!

திருத்தணி அருகே பயணிகளுடன் அரசுப் பேருந்தை இயக்க, கஞ்சா போதையில் இருந்த இளைஞர் முயன்றதால், பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

அரசு பேருந்தை அத்துமீறி இயக்கி, பேருந்து ஊழியர்களையும், பயணிகளையும் பதைபதைப்புக்கு உள்ளாக்கியிருக்கிறார் இந்த கஞ்சா போதை இளைஞர்.

காஞ்சிபுரத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்த தடம் எண்- 212 H என்ற அரசு பேருந்து, 50 பயணிகளுடன் திருப்பதி நோக்கிச் சென்றது. அந்தப் பேருந்து சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லை பகுதியில் தனியார் உணவகம் ஒன்றின் முன்பாக, உணவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. சில பயணிகளும், நடத்துனர் மற்றும் ஓட்டுநரும், பேருந்தில் இருந்து உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளனர்.

அப்போது இதே பேருந்தில் ஆந்திர மாநிலம் நகரிக்கு டிக்கெட் எடுத்து பயணித்த இரண்டு கஞ்சா போதை இளைஞர்களில் ஒருவர், திடீரென ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி, பேருந்தை இயக்க முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்த, பேருந்தில் இருந்த பெண் பயணிகள் உள்ளிட்டோர், அலறி அடித்தும் கண்டுகொள்ளாமல், போதை இளைஞர் பேருந்தை இயக்குவதிலேயே குறியாக இருந்துள்ளார்.

பயணிகளின் அலறல் கேட்டு உடனே வந்த ஓட்டுநரும், நடத்துநரும் கஞ்சா போதை இளைஞரின் செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, இளைஞரை சத்தமிட்டு பேருந்தில் இருந்து இறக்கி விட்டனர். அப்போது அதனை வீடியோ எடுத்தவரையும் போதை இளைஞர், நான் யூடியூபர், என்னையே வீடியோ எடுக்கிறாராயா என்று மிரட்டியிருக்கிறார்.

கஞ்சா போதை இளைஞர் அரசு பேருந்து இயக்க முயற்சி செய்து விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று பொதுமக்கள் ஆவேசமானதை தொடர்ந்து, கஞ்சா போதை இளைஞர்களை அங்கேயே விட்டுவிட்டு பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் கஞ்சா போதை இளைஞர்கள் அந்தப் பகுதியிலும் தகராறில் ஈடுபட்டுவிட்டு மற்றொரு பேருந்தில் நகரிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. தகவலின் பேரில் அங்குவந்த திருத்தணி போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருத்தணி பகுதியில் கஞ்சா விற்பனையை போலீசார் கட்டுப்படுத்த முடியாததால் இளைஞர்கள் பலரும் கஞ்சா போதைக்கு அடிமையானதாகக் கூறப்பட்டு வருகிறது. அதன் எதிரொலிதான் தற்போது அரசுப் பேருந்தை இயக்க முயன்ற சம்பவமும் என்கிறார்கள் அப்பகுதியினர்.

Exit mobile version