2020 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு காலண்டரில், மாமல்லப்புரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்தித்து பேசிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசு ஆண்டுதோறும் அதிகாரப்பூர்வ காலண்டரை வெளியிட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்த காலண்டரின் ஒவ்வொரு மாதத்துக்கான அட்டையில் மத்திய அரசின் முக்கிய திட்டங்களான ஸ்வச்பாரத், ஏக்பாரத் ஸ்ரத்ரா பாரத் திட்டம், மக்களை ஊக்கப்படுத்தும் வாசகங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவ கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டிற்கான புதிய காலண்டரை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை குறிக்கும் வகையில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சமீபத்தில், பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திட இந்தியாவிற்கு வருகைப் புரிந்த சீன அதிபர், மாமல்லபுரத்தை பார்வையிட்டார். அப்போது, பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையில் சீன அதிபரை வரவேற்றார். பின்னர், கடற்கரையோரம் இருவரும் ஒன்றாக சந்தித்து பேசிய புகைப்படங்களும் வைரலாகின. இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் உடன் பிரதமர் மோடி வேட்டி சட்டையில் இருக்கும் புகைப்படம் காலண்டரில் இடம்பெற்றிருக்கிறது.