தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் செவ்வாய்கிழமை எண்ணப்படுகின்றன. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றன.
இந்த தேர்தலில் சராசரியாக, 78.47 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப் பெட்டிகள், சீலிடப்பட்டு 74 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அங்கு 3 அடுக்கு போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 74 மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகத்தில் கம்பி வலைகள், மரத்தால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் வார்டு வாரியாக, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பெட்டிகள் திறக்கப்படும். அதற்காக ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப 40 மேசைகள் வரை போடப்பட்டுள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டு, வட்டார பார்வையாளர் ஒப்புதலுடன் வெற்றி குறித்த விவரங்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Discussion about this post