மீன்பிடிக்க சென்ற 4 மணிநேரத்திலேயே, தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லைதாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜேம்ஸ், முருகேசன், நவீன் ஆனந்த் மற்றும் செந்தில்பாண்டி ஆகிய 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர். பின் அவர்களை இலங்கையின் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்களின் விசைப்படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற 4 மணிநேரத்திலேயே, இலங்கை கடற்படையினர் கைது செய்தது அந்நாட்டின் கடற்படையினர் மீது அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இதனிடையே கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளது. நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அச்சுறுத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கப்பலை விசைப்படகு மீது மோதச்செய்து சேதப்படுத்தியதாகவும், சிலரின் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்கள் மற்றும் வலைகளை சேதப்படுத்தியதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பி உள்ளனர்.
Discussion about this post