சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை கோட்டையில் நடைபெற்ற 73-வது சுதந்திர தின விழாவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் சிவனுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருது அறிவிக்கப்பட்டது. வேறொரு நாளில் அவருக்கு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது மீன் வளத்துறை துணை இயக்குனர் ரம்யா லட்சுமிக்கு வழங்கப்பட்டது. நெல்லையில் கொள்ளையர்களை விரட்டியடித்த சண்முகவேல் செந்தாமரை தம்பதியினருக்கு அதீத துணிவுக்கான முதல்வர் சிறப்பு விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்குகினார். சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது. பாத்வே சோபின் நிறுவனத்தின் இணை நிறுவனர் சந்திரா பிரசாத்துக்கு சிறந்த சமூக பணியாளருக்கான விருது வழங்கப்பட்டது.
மாநில இளைஞர் விருது ஆண்கள் பிரிவில் நாமக்கலை சேர்ந்த நவீன்குமார், திண்டுக்கலை சேர்ந்த ஆனந்த்குமார் ஆகியோருக்கும், பெண்கள் பிரிவில் மதுரையை சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். சென்னை காவல் ஆணையரகம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறைக்கு முதலமைச்சரின் நல் ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது. வணிக வரித்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி பூங்கா துறைக்கு முதலமைச்சரின் நல் ஆளுமைக்கான விருது, சேலத்திற்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது மற்றும் தருமபுரி, வேதாரண்யம், அறந்தாங்கிக்கு சிறந்த நகராட்சிக்கான விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.
சிறந்த பேரூராட்சிக்கான விருதில் மதுரையில் உள்ள கல்லுப்பட்டிக்கு முதல் பரிசு, திரூவாரூரில் உள்ள நன்னிலத்திற்கு இரண்டாம் பரிசு மற்றும் சிறந்த பேரூராட்சிக்கான விருதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகருக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.