மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து தமிழகத்திற்கு அதிகளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில் அணையின் நீர்மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டியுள்ளது.
வரலாற்றில் 65-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ள நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்றும் விவசாயிகளுக்கு தேவையான உரம் உள்ளிட்ட பொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேட்டூர் அணையை திறந்து வைத்தப்பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், காவிரி – கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தை அதிமுக அரசு சாத்தியமாக்கும் என்று உறுதி அளித்தார்.
முதற்கட்டமாக 3 ஆயிரம் கனஅடியும், பின்னர், படிப்படியாக 10 ஆயிரம் கனஅடியாகவும் தண்ணீர் திறந்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் 12 மாவட்டங்களை சேர்ந்த 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தகுந்தது.