எம்.ஜி.ஆரை போன்று நல்ல கருத்துகளை சினிமா கலைஞர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கப்பட்டு இந்த ஆண்டு வெளியான எல்.கே.ஜி., கோமாளி, பப்பி ஆகிய படங்களின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, காமராஜ், சி.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் திரைப்பட நடிகர்களுக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், உலகப் படங்களுக்கு நிகராக தமிழ் படங்கள் எடுக்கப்படுவது பெருமையளிப்பதாக கூறினார். உலகமெங்கும் பேசப்படும் திரைப்படங்களை தருபவர்கள் தமிழ் திரையுலகினர் என பாராட்டிய முதலமைச்சர், எம்.ஜி.ஆரை போன்று நல்ல கருத்துகளை சினிமா கலைஞர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றார். இளைஞர்கள் நலனை கருதி, தீய கருத்துகளை பரப்பும் படங்களை எடுக்க வேண்டாம் என திரைத்துறையினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
Discussion about this post