தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, தான் ஒய்வு பெற உள்ள தருணத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தற்போதைய சூழலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சிகிச்சையில் இருக்கும் நோயாளி மரணம் அடைந்தால் அதுதொடர்பாக மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யும் வழக்கமான நடைமுறைக்கு தடை விதித்து டிஜிபி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கையின் படி, இனிமேல் சிகிச்சையில் இருக்கும் நோயாளியின் மரணம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால், குற்றச் செயல்கள் உறுதி செய்யப்பட்டாலும், மற்ற வழக்குகளைப் போல் கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. சிகிச்சையின் போது அலட்சியமாக நடந்து கொண்டதாக ஒரு மருத்துவரின் மீது குற்றம் சாட்டப்பட்டாலும், வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக மாநகர காவல் ஆணையரோ அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளரோ ஆய்வு செய்ய வேண்டும் என்றெல்லாம் டிஜிபியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என டிஜிபி கூறியிருப்பதுதான் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் நிகழ்வதாக பல்வேறு புகார்கள் வரும் சூழலில் இந்த அறிக்கை அவர்களை இன்னும் அலட்சியம் காட்டத்தானே செய்யும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அதே போல தமிழக அரசியல் களத்தில் ஆளும்கட்சி தொடர்பாக நிலவும் இக்கட்டான சூழலில், அதுவும் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில் இந்த அறிக்கை வெளியாவதன் அவசியம் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
கிண்டியில் புதிதாக அரசு மருத்துவமனையை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில்தான், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு மாற்றினார்கள். அப்படியானால் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லையா? அல்லது அதற்குரிய மருத்துவர்கள் இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ள சூழலில், டிஜிபியின் அறிக்கை வெளியாகி இருப்பதும் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஏற்கனவே மாநில அரசின் அனுமதி பெறாமல் தமிழகத்தில் சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று அரசாணை வெளியிட்ட நிலையில், அதன் அடுத்த நகர்வாகவே டிஜிபியின் அறிக்கையும் வெளியிடப்பட்டிருப்பதாகவும் எந்தெந்த இடங்களில் சிக்கல் வருமோ அதையெல்லாம் திமுக அரசு தங்களுக்கு ஆதரவாக தயார் படுத்துகிறார்கள் என்றும் அரசியல் நோக்கர்கள் சந்தேகத்தை கிளப்புகின்றனர்.
மொத்தத்தில் தமிழகத்தில் ஏதோ ஒரு விஷமத்தனத்தை மறைக்க புதிது புதிதாக அறிக்கைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றனவோ என்ற ஆழமான சந்தேகம்தான் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனங்களிலும் எழுந்துள்ளது.