17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இந்த நிலையில் மக்களவை முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. முதல் 2 நாட்களில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள வீரேந்தர் குமார் அனைத்து உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்களுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூலை 4 ஆம் தேதி மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஜூலை 5ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இதனிடையே மாநிலங்களவை ஜூன் 20 ஆம் தேதி துவங்கி ஜூலை 26 ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.