மிக இளம் வயதிலேயே மாநில அமைச்சரானவர்: சுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு

1953 ஆம் ஆண்டு, பிப்ரவரி 14 ஆம் தேதி ஹரியானா மாநிலத்தின் அம்பாலா கண்ட்டில் பிறந்தவர் சுஷ்மா சுவராஜ். பிறந்தது அம்பாலா என்றாலும், சுஷ்மாவின் பூர்வீகம் பாகிஸ்தானின் லாஹூர் நகரத்தில் உள்ள தரம்புரா.

கண்டிப்புடனான ஆர்.எஸ்.எஸ் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்த சுஷ்மா, சமஸ்கிருதம் மற்றும் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிக்கொண்டே அரசியலிலும் ஈடுபட்டார்.

1975-ம் ஆண்டு இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலை பிரகடத்தை எதிர்த்து களம் கண்ட போது, சக போராளியும் வழக்கறிஞருமான சுவராஜ் கௌஷலை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சுஷ்மா சுவராஜ்.

அவசர நிலை காலகட்டத்திற்குப் பிறகு, 1977ம் ஆண்டு நடைபெற்ற ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கிய சுஷ்மா, தான் பிறந்த அம்பாலாவில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றியையடுத்து மாநில அமைச்சராகவும் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 25. மிக இளம் வயதில் அமைச்சரான பெண் என்ற சாதனையை படைத்தார் சுஷ்மா. அதுமட்டுமல்ல, தனது 27-ம் வயதில் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்று அரசியல் அரங்கை அதிரவைத்தார்.

1990ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரான போது மாநில அரசியலிலிருந்து, தேசிய அரசியல் களத்திற்குள் புகுந்தார். 1996ம் ஆண்டில், 13-நாட்கள் மட்டுமே நீடித்த வாஜ்பாய் அரசில், தெற்கு டெல்லி தொகுதியில் வென்று மத்திய அமைச்சரானார்.

பின்னர் 1998ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் தெற்கு டெல்லியில் வெற்றி பெற்று, தகவல்-ஒளிபரப்பு மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

7 மாதங்கள் மட்டுமே அமைச்சராக பணியாற்றினார் என்றாலும், பல புரட்சிகளை தன் துறையில் ஏற்படுத்தினார் சுஷ்மா. குறிப்பாக சினிமாவை ஒரு தொழில் துறையாக அங்கீகரித்து உத்தரவிட்டார். இதன்மூலம் திரைப்படங்கள் தயாரிக்க வங்கிக் கடன் பெற வழிபிறந்தது. இன்றைய இந்திய சினிமாவின் வளர்ச்சியில் சுஷ்மா சுவராஜின் பங்கு மிக முக்கியமானது.

அதுமட்டுமல்லாமல், COMMUNITY RADIO என்று அழைக்கப்படும், ஒரு வளாகத்திற்குள் மட்டும் ஒலிபரப்பாகும் வானொலி சேவைக்கு அனுமதியளித்தவரும் சுஷ்மா தான். இதன் மூலம் பல பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களின் திறன்களை வெளிக்காட்டும் சொந்த வானொலி சேவையைத் தொடங்கினர்.

2003ம் ஆண்டு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராகவும், 2009ம் ஆண்டு மக்களவை எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.

2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், மத்திய பிரதேசம் விதிஷா தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நரேந்திர மோடி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சரானார். இந்திரா காந்திக்குப் பிறகு வெளியுறவுத்துறை அமைச்சரான முதல் பெண், மோடியின் வெற்றிகரமான வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்தவர் என்று பல பெருமைகளைப் பெற்றார். குறிப்பாக வெளிநாடுவாழ் இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க ட்விட்டர் தளத்தை பயன்படுத்தி உலகப்புகழ் பெற்றார். இதன் மூலம் உலக அளவில் அதிக மக்களால் ட்விட்டரில் பின்தொடரப்படும் பெண் தலைவரானார்.

ஈரானில் சிக்கித் தவித்த 168 இந்தியர்களை மீட்டது, ஒரு வருடமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிக்கு இந்தியாவில் மருத்துவ சிகிச்சை அளித்து பிழைக்கச் செய்தது, 8 மாத குழந்தையுடன் அல்லாடிய யேமன் நாட்டுப் பெண்ணை காப்பாற்றியது என்று ட்விட்டர் மூலம் தகல்களைப் பெற்று பல சாதனைகளைப் படைத்தார். வாஷிங்டன் போஸ்ட் இதழ் இவரை இந்தியாவின் SUPERMOM என்று புகழ்ந்தது.

புகழ்பெற்ற WALL STREET JOURNAL நடத்திய கருத்துக்கணிப்பில், இந்தியாவின் அதிகம் நேசிக்கப்படும் அரசியல் தலைவராக தேர்வானார்.

உடல்நலம் குன்றியதால் சுஷ்மா தேர்தலில் போட்டியிடாமல் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார். மரணிப்பதற்கு 15 மணி நேரம் முன்பாக தனது கடைசி ட்விட்டர் பதிவை எழுதியுள்ளார். அதில் ஜம்மூ-காஷ்மீர் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டதை குறிப்பிட்டு, “இந்த நாளுக்காகவே நான் வாழ்நாள் எல்லாம் காத்திருந்தேன்” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் விடை பெற்றிருக்கிறார் சுஷ்மா சுவராஜ்.

Exit mobile version