வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் 7,73,00,000 ரூபாய் வருமானத்தை மறைத்ததாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்தது. இந்த வழக்கு தொடர்பாக இரண்டு வாரங்களில் பதில் அளிக்குமாறு, வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது.